SLNCU

ஹுருலு உயிர்க்கோளக் காப்பகம்

ஹுருலு உயிர்க்கோளக் காப்பகம் இலங்கையில் அண்ணளவாக 62,680 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட வெப்பமண்டல உலர் பசுமையான காடுகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும், இது 1977 ஆம் ஆண்டில் ஒரு உயிர்க்கோளக் காப்பகமாக பெயரிடப்பட்டது. 8.22465 ͦ அகலாங்கிலும் 80.8236 ͦ நெட்டாங்கிலும் அமைந்துள்ள இந்தக் காப்பகம், சராசரியாக ஆண்டுக்கு 1600 மி.மீ மழைவீழ்ச்சி மற்றும் 27.3 ͦ C சராசரி வெப்பநிலையுடன் வறண்ட பருவமழை காலநிலையைக் கொண்டுள்ளது. இதன் தாவரத்தொகுதியானது சாட்டின் மரம் (Chloroxylon swietenia), பாலை (Manilkara hexandra) மற்றும் கருங்காலி (Diospyros ebenum) போன்ற இனங்களால் மேம்பட்டு நிற்கின்ற அதேவேளையில் இது ஆசிய யானை, சிறுத்தை, இலங்கைக் காட்டுக்கோழி, காட்டுப் பூனை மற்றும் நட்சத்திர ஆமை (Testudo elegans)  உள்ளிட்ட பல அழிந்துவரும் விலங்குகளுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது. சுற்றியுள்ள மக்கள் தொகை 14,660 என மதிப்பிடப்பட்டிருந்தாலும், கடந்த கால உள்நாட்டு அமைதியின்மை காரணமாக இந்தக் காப்பகம் மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் முறையான உயிர்க்கோளம் தொடர்பான செயற்பாடுகள் என்பவற்றைக் கொண்டுள்ளது, உள்ளூர் சமூகங்கள் பாரம்பரியமாக வனப்பகுதிகளை முக்கியமாக இடப்பெயர்வு பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்துகின்றன.