SLNCU

உலக நினைவகம் (MoW)

கடந்த கால சந்ததியினரை நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துடன் இணைக்கும் அறிவு, அனுபவங்கள் மற்றும் மதிப்புகளைப் பாதுகாக்கின்ற ஆவண மரபுரிமையானது மனிதகுலத்தின் பதிவுசெய்யப்பட்ட நினைவகத்தை உருவாக்குகின்றது. மோதல், சமூக எழுச்சி, புறக்கணிப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றம் போன்ற வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈடுசெய்ய முடியாத ஆவண மரபுரிமையை இழப்பதைத் தடுக்கவும் “கூட்டு மறதி” அபாயத்தைக் கையாளவும் யுனெஸ்கோ 1992 ஆம் ஆண்டு உலக நினைவக (MoW) நிகழ்ச்சித்திட்டத்தை நிறுவியது.

“உலகின் ஆவண மரபுரிமை அனைவருக்கும் சொந்தமானது, அது முழுமையாகப்பேணிப் பாதுகாக்கப்பட்டு, அனைவருக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டும், மற்றும் தடையின்றி அனைவரும் நிரந்தரமாக அணுகக்கூடியதாக இருத்தல் வேண்டும்” என்ற கோட்பாட்டினால் இந்நிகழ்ச்சித்திட்டம் வழிநடத்தப்படுகின்றது. ஆவண மரபுரிமையின் மதிப்பைப் பேணிப் பாதுகாப்பதை எளிதாக்குதல், உலகளாவிய அணுகலை ஊக்குவித்தல் மற்றும் பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். சர்வதேச, பிராந்திய மற்றும் தேசியக் குழுக்கள் மூலம், ஆவண மரபுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் அணுகுதல் குறித்த யுனெஸ்கோவின் 2015 ஆம் ஆண்டின் பரிந்துரையின்படி, கையெழுத்துப் பிரதிகள், காப்பகங்கள், கட்புல செவிப்புலக் கருவிகள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் என்பவற்றைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு உலக நினைவக நிகழ்ச்சித்திட்டம் ஆதரவளிக்கின்றது.

யுனெஸ்கோவின் உலக நினைவக பதிவேட்டில் ஐந்து கல்வெட்டுக்களைக்கொண்ட உலக நினைவக நிகழ்ச்சித்திட்டத்திற்கு இலங்கை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது: சுனாமி ஆவணக் காப்பகம், ஐக்கிய கிழக்கு இந்தியக் கம்பனி(Vereenigde Ostindische Compagnie – VoC) ஆவணக் காப்பகம், மும்மொழிக் கல்வெட்டு, மகாவம்சம் மற்றும் பாணந்துறை விவாதத்தின் ஆவணங்கள் என்பவையே அவையாகும். இக்கல்வெட்டுக்கள் நாட்டின் வளமான வரலாற்று, சமய, மொழியியல் மற்றும் சமூக மரபுரிமைப் பேறினைப் பிரதிபலிக்கின்றன.

தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை மற்றும் தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகளால் உலக நினைவக நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் சாதனைகளுக்கு வலுவாக ஆதரவளிக்கப்படுகின்றன. அவற்றின் தொழில் ரீதியான மேற்பார்வை நாடு முழுவதும் ஆவண மரபுரிமைப் பாதுகாப்பை தொடர்ந்தும் வலுப்படுத்துகின்றது.