ஐக்கிய நாடுகள் சபையின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான முன்னணி அமைப்பான யுனெஸ்கோ, உலகளவில் விளையாட்டின் கல்வி, கலாசார மற்றும் சமூக விழுமியங்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கொள்கை வழிகாட்டுதல், தொழில்நுட்ப உதவி மற்றும் ஆலோசனைச் சேவைகள் என்பவற்றின் மூலம், விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் மற்றும் போட்டியின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நெறிமுறை விளையாட்டு அமைப்புகளை உருவாக்கி, வலுப்படுத்துவதில் உறுப்பு நாடுகளுக்கு யுனெஸ்கோ ஆதரவளிக்கின்றது.
இந்தப் பகுதியில் யுனெஸ்கோவின் பணியின் ஒரு அடிப்படையாக விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான சர்வதேச சமவாயம் (2005) உள்ளது. இந்த மைல்கல் ஒப்பந்தம் ஊக்கமருந்துக்கு எதிரான ஒரேயொரு உலகளாவிய சட்டச் சாதனமாகும், மேலும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு விதித் தொகுப்பிற்கு இணங்க ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டவாக்கம், ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றுக்கு உடன்படுவதற்கு அரசாங்கங்களுக்கு ஒரு பொதுவான வரைவுச்சட்டகத்தை வழங்குகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், விளையாட்டின் அனைத்து மட்டங்களிலும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நிலை, நியாயமான மற்றும் பாதுகாப்பானதொரு விளையாட்டுக் களத்தை இது உறுதிசெய்கின்றது.
2005 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு 2007 முதல் நடைமுறையில் உள்ள இந்த சமவாயத்தில் தற்போது இலங்கை உட்பட 192 நாடுகள் பங்கேற்கின்றன, இது யுனெஸ்கோவின் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது ஒப்பந்தமாக மாறியுள்ளது. இது பொதுமக்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் விளையாட்டின் நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் உலகளாவிய மதிப்புக்களைப் பாதுகாப்பதற்கும் வலுவான உலகளாவிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.
இந்த சமவாயத்தின் நிர்வாகம் தரப்பினர்களின் மாநாடு (COP) மூலம் மேற்பார்வை செய்யப்படுகின்றது, இது செயற்படுத்தலை வழிநடத்தவும், இணக்கத்தைக் கண்காணிக்கவும், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்துடன் (WADA) ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், விளையாட்டில் ஊக்கமருந்து ஒழிப்பு நிதியிலிருந்து வளங்களைப் பயன்படுத்துவதை மேற்பார்வையிடவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுகின்றது. 2008 முதல், கல்வி, விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்து இந்த நிதியத்தின் மூலம் 120 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 200 இற்கும் மேற்பட்ட ஊக்கமருந்து எதிர்ப்பு கருத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், இந்த சமவாயத்தின் நோக்கங்கள் இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (SLADA) மூலம் தேசிய அளவில் செயற்படுத்தப்படுகின்றன. இது சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு தரநியமங்களுக்கு இணங்குவதை உறுதி செய்கின்றது, சிறந்த விளையாட்டுக் கல்வியை ஊக்குவிக்கிறது, சோதனை மற்றும் முடிவு முகாமைத்துவத்தை நடத்துகின்றது மற்றும் மேலும் யுனெஸ்கோ மற்றும் WADA கோட்பாடுகளுக்கு இணங்க நெறிமுறை, நியாயமான மற்றும் ஊக்கமருந்து இல்லாத விளையாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துகின்றது.