SLNCU

டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணக் காப்பகங்கள்

1602 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி (Verenigde Oostindische Compagnie- VoC), ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட இரு நூற்றாண்டு கால வணிக, நிர்வாக, அரசியல் மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் ஆவணக் காப்பகங்களை விட்டுச் சென்றுள்ளது. ஹேக், ஜகார்த்தா, கொழும்பு, சென்னை மற்றும் கேப் டவுன் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாக்கப்பட்டுள்ள VoC ஆவணக் காப்பகங்கள் அண்ணளவாக இருபத்தைந்து மில்லியன் பக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் கொண்டுள்ளன. அவை ஆரம்பகால உலகளாவிய வர்த்தக வலையமைப்புகள், காலனித்துவ நிர்வாகம், இராஜதந்திரம், சட்ட அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான அன்றாட தொடர்புகள் பற்றிய இணையற்ற நுண்ணறிவை வழங்குகின்றன. இந்தப் பதிவுகள் ஆரம்பகால முதலாளித்துவம், கடல்சார் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய அளவில் கலாசாரங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தின் வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.  நெதர்லாந்து, இந்தோனேசியா, இலங்கை, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளால் கூட்டாக பரிந்துரைக்கப்பட்ட VoC ஆவணக்காப்பகங்கள், அவற்றின் நோக்கம், ஒருமைப்பாடு மற்றும் பன்னாட்டுத் தன்மை காரணமாக, ஆரம்பகால நவீன உலக வரலாற்றை ஆய்வு செய்வதற்கான மிகவும் முழுமையான மற்றும் விரிவான ஆதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. உலகப் பதிவேட்டின் நினைவகத்தில் அவற்றினை உட்சேர்த்தலானது, நவீன உலகத்தை வடிவமைத்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் கலாசார செயல்முறைகளின் சான்றாக அவற்றின் மிகச்சிறந்த உலகளாவிய மதிப்பை அங்கீகரிக்கிறது.