செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் பற்றி யுனெஸ்கோவின் பரிந்துரை என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) பொறுப்பான வடிவமைப்பு, மேம்பாடு, கையாளுதல் மற்றும் பயன்பாடு என்பவற்றுக்கு வழிகாட்டுவதற்காக பகிரப்பட்ட கொள்கைகளை நிறுவும் முதல் உலகளாவிய வரைவுச்சட்டகமாகும். 2021 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் 193 உறுப்பு நாடுகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மனித கண்ணியம், சமூக நல்வாழ்வு, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அமைதி என்பவற்றை மேம்படுத்துவதையும் உறுதிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளையில் இடர்கள் மற்றும் தீங்குகளையும் குறைக்கிறது.
சமத்துவம், அந்தரங்கத்தன்மை, பாரபட்சமின்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான மரியாதையை வலியுறுத்துகின்ற இந்த வரைவுச்சட்டகமானது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது. AI மனிதனை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும், குறிப்பாக கல்வி, சுகாதாரப்பராமரிப்பு, சட்ட அமுலாக்கம் மற்றும் பொது நிர்வாகம் போன்ற முக்கியமான துறைகளில் முடிவெடுப்பதில் மனிதர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும்.
நியாயத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவை யுனெஸ்கோவின் AI நெறிமுறைகளுக்கு முக்கியமானவை. இது பக்கச்சார்பு மற்றும் பாகுபாட்டின் அபாயங்களை எடுத்துக்காட்டுகின்றது மற்றும் பாலின சமத்துவம், கலாசார பன்முகத்தன்மை மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை உள்ளடக்குவதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) நன்மைகள் சமமாகப் பகிரப்படும் வகையில் டிஜிட்டல் பிரிப்பினைக் குறைப்பதையும் இந்தப் பரிந்துரை வலியுறுத்துகின்றது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் விளக்கமளிக்கும் தன்மை ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன, நெறிமுறை தாக்க மதிப்பீடுகள், தெளிவான பொறுப்புகள் மற்றும் மேற்பார்வை வழிமுறைகள் ஆகியவை பொதுமக்களின் நம்பிக்கையை வளர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன. ஆற்றல்-திறனுள்ள AI மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் இணைந்த பொறுப்பான நடைமுறைகளை அறிவுறுத்தி, நிலைபேறான தன்மையும் வலியுறுத்தப்படுகின்றது.
நெறிமுறை சார்ந்த AI ஆராய்ச்சி, கொள்கை வகுத்தல் மற்றும் நிர்வாகம் என்பவற்றை வலுப்படுத்த கல்வி, ஆற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவம் என்பவற்றை யுனெஸ்கோ மேலும் எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சானது தேசிய AI நுணுக்கத்தை யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைப்பதோடு, நெறிமுறை, சமத்துவம் மற்றும் நிலையான AI பின்பற்றுதலை பேணி வளர்ப்பதற்காக அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கை வகுத்தல், பொது ஆலோசனை, நலனுரித்தாளர் ஈடுபாடு மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை ஊக்குவிக்கின்றது.